புகாா் பெட்டி
ரேஷன் கடை அருகே குப்பை
ரேஷன் கடை அருகே குப்பை
கோபி நகரில் பச்சைமலை ரேஷன் கடையின் அருகே 2 இடங்களில் குப்பை தேங்கி கிடக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதில் மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழும்புவதோடு, அங்குள்ளவர்களுக்கு சுவாச கோளாறும் ஏற்படுகிறது. மேலும் புதுப்பாளையம் ரேஷன் கடைக்கு அருகிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, பச்சமலை அடிவாரம், கோபி.
-------
நடுரோட்டில் குழி
கோபி நகராட்சி 30-வது வார்டு காலனியில் உள்ள ஒரு ரோட்டில் சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக குழி தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த ரோட்டை யாரும் பயன்படுத்த முடியவில்லை. பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கணேசன், கோபி.
---------
எரியாத சோலார் விளக்கு
வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள பங்களாப்புதூர் மெயின்ரோட்டில் ேசாலார் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வாணிப்புத்தூர்.
---------
புதர் மண்டி கிடக்கும் சாக்கடை
வெள்ளாளபாளையம் அருந்ததியர் தெருவில் சாக்கடை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சாக்கடை கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.
குருசெம்பன், ஜம்பை.
-----
பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதி அண்ணா நகர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் வசதிக்காக பொது கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. தற்போது இந்த கழிப்பிடம் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. எனவே இந்த கழிப்பிடத்தை பராமரித்து பயன்படுத்துவதற்கு வசதியாக சீரமைத்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்.
------
கொசு தொல்லை
பவானி மெயின்ரோடு பி.பி.அக்ரகாரம் சர்ச் காம்பவுண்டு சந்து பகுதியில் பல நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யவில்லை. மேலும் சாக்கடை திடக்கழிவுகளை அள்ளிப்போட்டால் அதை எடுக்காமலும் இருக்கிறார்கள். இதனால் எங்கள் பகுதியில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பி.பி.அக்ரகாரம்.
----------
சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தப்படுமா?
ஈரோடு பெரியவலசு ராதாகிருஷ்ணன் 2-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்தி கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரியவலசு.
-------
தேங்கும் சாக்கடை கழிவுநீர்
ஈரோடு மாநகராட்சி கருங்கல்பாளையம் 59-வது வார்டுக்கு உள்பட்ட கே.ஏ.எஸ்.நகர் 3-வது வீதியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் குழி மூடப்படாததால் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், கருங்கல்பாளையம்.
Related Tags :
Next Story