சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த கன்னலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு மனைவி சாந்தி (வயது 53). இவரை கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் செஞ்சி தாலுகா பென்னகர் கிராமத்தை சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் உத்திரகுமார் (49), புதுச்சேரி பண்டசோழநல்லூரை சேர்ந்த வசந்தராஜா ஆகியோர் சந்தித்து எங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் சிலரை தெரியும், நாங்கள் அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு வேலை வாங்கிக்கொடுத்துள்ளோம், எனவே உங்கள் மகனுக்கும் விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறியதோடு அதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சாந்தி, அவரது மகன் அவினாஷ் மற்றும் ஏழுமலை ஆகியோர் உத்திரகுமாரிடம் நேரடியாகவும், வங்கி கணக்கு வழியாகவும் மொத்தம் ரூ.10 லட்சத்தை கொடுத்தனர்.
ரூ.10 லட்சம் மோசடி
இதையடுத்து சாந்தி், அவரது மகன் அவினாசிடம் உத்திரகுமாரும், வசந்தராஜாவும் விமான நிலையத்தில் வேலைக்கான ஒரு உத்தரவு நகலை வழங்கினர். அதை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு சென்று காண்பித்தபோது அது போலியான உத்தரவு என்பது தெரியவந்தது.
இதுபற்றி சாந்தி, உத்திரகுமாரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு ஒரு மாதம் கழித்து ரூ.10 லட்சத்தை தருவதாக கூறியவர் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்தார். மேலும் பணத்தை தரும்படி கேட்டால் கொலை செய்து விடுவதாக உத்திரகுமாரும், வசந்தராஜாவும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து சாந்தி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உத்திரகுமார், வசந்தராஜா ஆகிய இருவரையும் பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினரான சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
செஞ்சியை சேர்ந்தவர் கைது
இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற உத்திரகுமாரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வசந்தராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story