காவேரி மருத்துவமனை சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம்; அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்


காவேரி மருத்துவமனை சார்பில் இலவச இதய பரிசோதனை முகாம்; அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 30 Sept 2021 2:37 PM IST (Updated: 30 Sept 2021 2:37 PM IST)
t-max-icont-min-icon

காவேரி மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் இலவச இதய பரிசோதனை மருத்துவ முகாமை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதய பரிசோதனை முகாம்
உலக இதய தின அனுசரிப்பின் ஒரு அங்கமாக, சென்னை காவேரி மருத்துவமனை இலவச இதய பரிசோதனை மருத்துவ முகாம்களை நடத்துகிறது. 50 வயதுக்கு உட்பட்ட இளையோர்களை இலக்காக கொண்ட இந்த செயல் திட்டம், இதய பாதிப்பு இடர்கள் மற்றும் இயல்புக்கு மாறான நிலைகளையும் அடையாளம் கண்டு அதன் வழியாக ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த ஊக்குவிப்பதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. காவேரி மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாமை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். திடீர் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் உலக அளவில் 15 முதல் 20 சதவீதமாக இருக்கிறது. இதில் 35 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 1 முதல் 2 சதவீதம் ஆகும்.

பாராட்டு

இதுபற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

உயிர்களை காப்பாற்றுவதில் உரிய நேரத்தில் நோய் கண்டறிவதும், சிகிச்சை பெறுவதும் மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது. தொடர்ச்சியான விழிப்புணர்வின் வழியாக இதை நம்மால் எட்ட முடியும். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும், இதன்மூலம் தரமான சுகாதார பராமரிப்பை பெறுவதை ஏதுவாக்கவும் உதவுகின்ற இந்த செயல் திட்டத்தை தொடங்கியதற்காக காவேரி மருத்துவமனையை மனமார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயிர்களை காப்பாற்றலாம்
இதுதொடர்பாக சென்னை காவேரி மருத்துவமனையின் இதயவியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அனந்தராமன் கூறுகையில், ‘இளவயது நபர்களை உரிய நேரத்திற்குள் உடல்நல பராமரிப்பை அணுகிப்பெற டிஜிட்டல் வழிமுறையை பயன்படுத்திக்கொள்ளுமாறும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீது தொடர் கவனம் வைத்திருக்குமாறும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்’ என்றார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயல் தலைவருமான டாக்டர் அரவிந்தன் கூறும்போது, ‘சில சமயங்களில் இதய பாதிப்பு அறிகுறிகள் கவனிக்கப்படாமலேயே விடப்படுகின்றன. காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு செல்வதனால் குணம் அடைவது கடும் சிரமமாகிவிடுகிறது. நாங்கள் நடத்துகின்ற இந்த சுகாதார முகாம்கள், மக்களுக்கு இந்த விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கும். மேலும் இதன்மூலம் உயிர்களை காப்பாற்றிக்கொள்ளலாம்’ என்றார்.

மேற்கண்ட தகவல் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story