கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு


கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 30 Sept 2021 9:27 PM IST (Updated: 30 Sept 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி

கடத்தப்பட்ட 5 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் குழந்தை கடத்தல்

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). பழைய துணி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பஸ் நிலையத்தில் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு சாப்பிட பணம் இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்க மணிகண்டன் சென்றதாக தெரிகிறது. இதற்கிடையில் சங்கீதா குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் பணத்தை கொடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்குமாறு கூறினார். மேலும் வரும் வரை குழந்தைகளை பார்த்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து குழந்தை வாங்கிய அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில் அருகில் தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேரிடம் விசாரணை

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நீல நிற சட்டை, கண்ணாடி அணிந்திருந்த நபர் ஒருவர் குழந்தையை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னகாமணன், கார்த்திக்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளிட்டு துப்பு துலக்கி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ராமர், முருகேசன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுப்பதற்காக பெண் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. 

குழந்தை மீட்பு

மேலும் குழந்தை கடத்தி விற்பனை செய்தார்களா? இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
கடத்தப்பட்ட 48 மணி நேரத்தில் கடத்தல்காரர்களை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பாராட்டினார்.

Next Story