நர்சிங் கல்லூரியில் ராக்கிங் செய்த 13 மாணவர்கள் மீது வழக்கு
நர்சிங் கல்லூரியில் ராக்கிங் செய்த 13 மாணவர்கள் மீது வழக்கு
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் ராக்கிங் செய்த 13 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராக்கிங்
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவன் கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் செல்லும் சாலையில் உள்ள பி.பி.ஜி.நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து அவர் கல்லூரிக்கு வந்தார். பின்னர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்றார்.
இந்த நிலையில் 20-ந் தேதி இரவு கல்லூரிவிடுதியில் தங்கியிருந்த அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் கேரளாவை சேர்ந்த ராசிம் (வயது 20), சனுப் (21), அஸ்வின் ராஜ் (20), ஜித்து (20) ஆகிய 4 மாணவர்கள் முதலாமாண்டு மாணவனை அழைத்து ராக்கிங் செய்ததுடன், தாக்கியதாக தெரிகிறது.
போலீசில் புகார்
இதுகுறித்து முதலாமாண்டு மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர் சொந்த ஊருக்கு சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவைக்கு வந்த முதலாமாண்டு கல்லூரி மாணவர், 2-ம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்தது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ராசிம், சனுப், அஸ்வின் ராஜ், ஜித்து ஆகிய 4 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
இந்த விசாரணையில், முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ராசிம், சனுப், அஸ்வின்ராஜ், ஜித்து ஆகிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story