இலங்கையை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை


இலங்கையை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Sep 2021 6:43 PM GMT (Updated: 30 Sep 2021 6:43 PM GMT)

வாகன சோதனையில் சயனைடு குப்பி சிக்கிய விவகாரத்தில் இலங்கையை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது 75 சயனைடு குப்பிகள், 600 கிராம் சயனைடு விஷம், 4 ஜி.பி.எஸ். கருவிகள், ரூ.46ஆயிரத்து 200, ஒரு பவுன் தங்கம்,, இலங்கை பணம் ரூ.19 ஆயிரத்து 300, 9 செல்போன்கள், ஓட்டுனர் உரிமங்கள் ஆகியவை இருந்தன. அதில் வந்தவர்களை விசாரணை செய்தபோது இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற காந்தன் (வயது 43), உச்சிப்புளி சசிக்குமார் (32), மண்டபம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பதும், இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும், சென்னை உத்தண்டியில் வசித்து வந்தவருமான சுபாஷ்கரன் (41) என்பவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மேற்கண்டவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவத்தின்போது தப்பி ஓடிய இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த குமரன்முருகன் உதயகுமார் (40) என்பவரை களியக்காவிளை பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் தனியாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் மேற்கண்ட குமரன் முருகன் உதயகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவர் ஏற்கனவே சிறையில் 4 ஆண்டுகள் இருந்ததால் அதனை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது, போலியான முகவரியில் வருமானவரி கணக்கு எண் தொடங்கியது, ஆதார்கார்டு, சிம்கார்டு வாங்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மீண்டும் சென்னை புழல்சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story