பார்வதி யானையின் கண்களில் ஸ்கேன் பரிசோதனை


பார்வதி யானையின் கண்களில் ஸ்கேன் பரிசோதனை
x
தினத்தந்தி 1 Oct 2021 12:38 AM IST (Updated: 1 Oct 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

பார்வதி யானையின் கண்களில் ஸ்கேன் பரிசோதனை செய்யப் பட்டது.

மதுரை, 
கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட மதுரை பார்வதி யானையின் கண்களில் ஸ்கேன் பரிசோதனை செய்யப் பட்டது. இதனை சென்னை டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.
கண்களில் கோளாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு (வயது 24) கடந்த ஆண்டு இடது கண் கருவிழியில் வெள்ளையாக பூ படுதல் (கண் புரை) போன்ற பார்வை கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மற்றும் அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர்கள் யானையின் கண்ணை பரிசோதனை செய்து மருந்து கொடுத்து வந்தனர். 
இந்த நிலையில் இடது கண்ணில் வந்தது போன்று வலது கண்ணில் உள்ள கருவிழி லேசாக வெள்ளையாக மாற தொடங்கியது. இதுகுறித்து கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு டாக்டர் ரமணி தலைமையில் டாக்டர்கள் அடங்கியகுழு கடந்த மே மாதம் மதுரை வந்து யானையின் கண்களை பரிசோதனை செய்து பார்த்தனர். மேலும் அவர்கள் யானையின் ரத்த மாதிரி மற்றும் கண்களில் இருந்து சில மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். 
உறுதி
மேலும் முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் சேகர்பாபு நேரில் வந்து ஆய்வு செய்து யானைக்கு தேவையான மருத்துவ வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என்று உறுதி அளித்துவிட்டு சென்றனர். அதை தொடர்ந்து டாக்டர்கள் தெரிவித்த மருந்து, மாத்திரைகள் யானைக்கு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.
யானையை பரிசோதனை செய்வதற்காக சென்னையில் இருந்து கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு டாக்டர் ரமணி மற்றும் சிவசங்கரன் தலைமையில் டாக்டர்கள் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் யானையின் கண்களை பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் யானைக்கு தொடர்ந்து கொடுத்த மருத்து, மாத்திரைகளால் கண்களில் நோயின் தன்மை குறைந்து முன்னேற்றம் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
பரிசோதனை
இதுதவிர யானையின் கண்களை ஸ்கேன் பரிசோதனை செய்ய மதுரை கால்நடை டாக்டர்கள் அதற்கான மொபைல் ஸ்கேன் கருவிகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் மூலம் யானையின் கண்கள் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் தற்போது யானைக்கு வழங்கப்படும் சிகிக்சையில் கண்களில் உள்ள குறைபாடுகள் தற்போது குறைந்து வருவது ஸ்கேன் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளை டாக்டர்கள் கோவில் இணை கமிஷனரிடம் வழங்கினார்.

Next Story