மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு- தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு


மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு- தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sep 2021 7:31 PM GMT (Updated: 30 Sep 2021 7:31 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை தேர்தல் பார்வையாளர் சங்கர் ஆய்வு செய்தார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

பயிற்சி வகுப்பு

தென்காசி மாவட்டத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி் தேர்தல் நடக்கிறது. 6-ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்குரிய 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 69 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார்.
இதனை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மண்டல அலுவலர்கள் பணி இன்றியமையாததாக உள்ளதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும், மாவட்ட தேர்தல் மையத்திற்கும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இடையில் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களை முன்னதாக பார்வையிட்டு மின்சாரம், இருக்கைவசதி, கழிப்பறைகள், குடிநீர், சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரவண்டி போன்றவை உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். 

ஒப்படைக்க வேண்டும்

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்குப்பெட்டிகளுடன் முறையாக வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆள்மாறாட்டம், தேர்தல் விதிமீறல் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி வகுப்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் குருநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முத்து இளங்கோவன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story