புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Sep 2021 8:30 PM GMT (Updated: 30 Sep 2021 8:30 PM GMT)

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 
மதுரை மாநகராட்சி 4-வது வார்டு கோவலன் நகரில் இருந்து மீனாம்பிகை நகர் செல்லும் மணிமேகலை தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே, இங்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-மோகன், மதுரை.  
மேம்பாலம் வேண்டும்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் நலன்கருதி இந்த சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். 
-இன்பராஜா, மல்லாங்கிணறு. 
அடிப்படை வசதி தேவை 
ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட கோகுல்நகர் கிராமத்தில் குடிதண்ணீர் குழாய், சாலை வசதி, தெருவிளக்கு என எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-முருகவேல், ஏர்வாடி. 
புதிய மின்கம்பம் அமைப்பார்களா? 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுகோட்டை கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது அந்த மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது. காற்று மற்றும் மழை காலங்களில் மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழுமோ? என்ற அச்சத்துடன் உள்ளோம். எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைப்பார்களா?
-பொதுமக்கள், திட்டுகோட்டை.
ஆபத்தான பயணிகள் நிழற்குடை 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மூலக்கரை மன்னர் கல்லூரி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. அது எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர். மழைக்காலங்களில் இந்த நிழற்குடையை பயன்படுத்தவே பொதுமக்கள் பயப்படுகின்றனர். எனவே, ஆபத்தான இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
-ஜெகநாதன், திருப்பரங்குன்றம். 
வாகன ஓட்டிகள் அவதி 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் 4-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இந்த பணிகள் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-ரபீக், காரைக்குடி. 
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழ முஸ்லிம் மஹால் பின்புறம் உள்ள ராமகிருஷ்ணா தெருவில்  கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள், மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பாண்டி, பரமக்குடி.
எரியாத தெருவிளக்குகள் 
மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் அடுத்த நாகைய்யாசாமி தெருவில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதன் காரணமாக இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, இங்குள்ள எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். 
-பொதுமக்கள், மதுரை, 
பயணிகள் நிழற்குடை வேண்டும்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கரிசல் குளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற் குடை இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் மழை மற்றும் வெயிலில் பஸ்சுக்காக காத்து நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
-சிவகவி, கரிசல் குளம்.

Next Story