சின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை


சின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Sep 2021 8:45 PM GMT (Updated: 30 Sep 2021 8:45 PM GMT)

ராமநகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கன்னட சின்னத்திரை நடிகை சவுஜன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநகர்: ராமநகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கன்னட சின்னத்திரை நடிகை சவுஜன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகை

ராமநகர் மாவட்டம் கும்பலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெலே கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சவுஜன்யா என்ற சவி மாதப்பா(வயது 25). சவுஜன்யாவின் சொந்த ஊர் குடகு மாவட்டம் குஷால்நகர் ஆகும். இவர், கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான சவுகுட்டு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு, பன் மற்றும் அர்ஜூன் கவுடா ஆகிய படங்களிலும் சவுஜன்யா நடித்திருந்தார்.

தற்போது அவர் தொலைகாட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது நண்பரான விவேக்கும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் விவேக்கிடம் காலை உணவு வாங்கி வரும்படி நடிகை சவுஜன்யா கூறியுள்ளார். அதன்படி, அவர் உணவு வாங்க கடைக்கு சென்றிருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த நடிகை சவுஜன்யா திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓட்டலில் இருந்து திரும்பி வந்த விவேக், சவுஜன்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் கும்பலகோடு போலீசார் விரைந்து வந்து நடிகை சவுஜன்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதங்களும் போலீசாருக்கு கிடைத்தது. அதாவது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் அவர் தற்கொலை கடிதங்களை எழுதி வைத்திருந்தார். 4 பக்கங்களை கொண்டதாக அந்த கடிதங்கள் இருந்தது. அந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று நடிகை சவுஜன்யா எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

காரணம் என்ன?

இதுபற்றி அறிந்த ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நடிகை சவுஜன்யா தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அவரது தற்கொலைக்கான காரணம் சரியாக தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.

நடிகை சவுஜன்யா பணப்பிரச்சினை அல்லது உடல் நல பிரச்சினை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும் அவரது தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடா்பாக அவரது நண்பர் விவேக்கிடம் போலீசார் விசாரித்து வருகிறாா்கள். சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘‘சவுஜன்யா சாவில் சந்தேகம் உள்ளது’’ - தந்தை சொல்கிறார்

நடிகை சவுஜன்யா தற்கொலை குறித்து, அவரது தந்தை பிரபு மாதப்பா நிருபர்களிடம் கூறும் போது, ‘‘எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. 2 நாட்களுக்கு முன்பு தான் ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டார். எதற்காக என்று கேட்ட போது காரணம் கூறவில்லை. மகளை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். எனது மகள் சாவு விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. அதுபற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்’’ என்றார்.

3 நாட்களுக்கு முன்பே தற்கொலை முடிவை எடுத்த சவுஜன்யா

நடிகை சவுஜன்யா 2 விதமான தற்கொலை கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில், ‘‘என்னுடய சாவுக்கு யாரும் காரணமில்லை. மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தேன். எனக்கு உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த தவறான முடிவை எடுக்க கூடாது. இதற்காக அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு நானே காரணம்’’ என்று அவர் எழுதி இருந்தார். அதே நேரத்தில் தற்கொலை கடிதங்களில் 27, 28 மற்றும் 30-ந் தேதிகளில் எழுதப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் நடிகை சவுஜன்யா 3 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்ய முடிவு எடுத்து, அந்த கடிதங்களை எழுதி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story