பெங்களூருவில் மின்சார பஸ் சேவை தொடங்கியது


பெங்களூருவில் மின்சார பஸ் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 30 Sep 2021 8:46 PM GMT (Updated: 30 Sep 2021 8:46 PM GMT)

பெங்களூருவில் மின்சார பஸ் போக்குவரத்து சேவையை மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.

பெங்களூரு: பெங்களூருவில் மின்சார பஸ் போக்குவரத்து சேவையை மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.

மின்சார பஸ் சேவை

கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு கலந்து கொண்டு, அந்த பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன. ஆனால் மீண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வது குறித்து சட்டத்துறையுடன் ஆலோசிக்கப்படும். எந்த ஊழியருக்கும் அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம்.

ஊழியர்களுக்கு சம்பளம்

கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் உள்ளன. பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. அத்தகைய நேரத்திலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. போக்குவரத்து கழகங்கள் மீண்டும் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஊழியர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

 அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். ஊரடங்கின்போது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2,500 கோடியை அரசு வழங்கியது. அதனால் சம்பளம் கிடைக்கவில்லை என்று யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.

தனியார் மயமாக்கும்

இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி உள்ளது. அதையும் விரைவில் பட்டுவாடா செய்வோம். பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை. இந்த விஷயத்தில் யாரோ சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். நகரில் மின்சார பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனால் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் சேவையை இன்று (நேற்று) தொடங்கியுள்ளோம்.

இந்த பஸ்கள் 45 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 225 கிலோ மீட்டர் தூரம் ஓடும். 300 மின்சார பஸ்களை இயக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் படிப்படியாக இயக்கப்படும். வருகிற நவம்பர் மாதம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 10 மின்சார பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார்.
இவ்வாறு ஸ்ரீராமலு கூறினார்.

Next Story