செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2021 12:55 PM GMT (Updated: 1 Oct 2021 12:55 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி் தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமண்டூர் ஊராட்சி வடபாதி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாமண்டூர் ஊராட்சி தென்பாதி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் புக்கத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் பொதுமக்களிடம் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்குமாறும், வாக்களிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அனைவரும் பதற்றமில்லாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

பயிற்சி வகுப்பு

அதனை தொடர்ந்து அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் தேர்தல் நடத்தும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பையும், அச்சரப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் அவர் பார்வையிட்டார். வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளப்பாதை, சக்கர நாற்காலி போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூனாம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதார்ஸ் பச்சோரோ, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயதீபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story