கோவையில் இருந்து வெளியூா்களுக்கு குளிர்சாதன பஸ்கள் இயக்கம்

145 நாட்களுக்கு பிறகு கோவையில் இருந்து வெளி யூர்களுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர்.
கோவை
145 நாட்களுக்கு பிறகு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர்.
குளிர்சாதன பஸ்கள் இயக்கம்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து படிப்படியாக வழங்கப்பட்ட தளர்வில் ஜூலை மாதம் 5-ந் தேதியில் இருந்து கோவையில் பொதுப் போக்குவரத்து தொடங்கியது.
இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், பள்ளி கல்லூரிகள் திறப்பு முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 145 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவையில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு போக்குவரத்து கழகங்களில் பஸ்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு, கிருமி நாசினி மற்றும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. இந்த பணிகள் நேற்று முன்தினம் இரவு வரை நீடித்தது.
13 பஸ்கள்
இந்த நிலையில் நேற்று காலை முதல் கோவை மத்திய பஸ் நிலையத்திலிருந்து சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு 13 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் நாள் என்பதால் 54 இருக்கைகள் உள்ள ஒவ்வொரு பஸ்சிலும் 20 முதல் 25 பேர் மட்டுமே சென்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 13 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. வெள்ளிக்கிழமை என்பதால் பணி முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் முதல் நாள் என்பதாலும், நேற்று பெய்த மழை காரணமாகவும் குளிர்சாதன பஸ்களில் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னைக்கு 4 பஸ்கள்
இதேபோல் காந்திபுரம் அதி விரைவு பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை மற்றும் மாலையில் தலா 2 பஸ்கள் புறப்பட்டு சென்றன. கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு காலை மற்றும் மாலையில் தலா ஒரு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






