கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை
குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீக்குளிக்க முயற்சி
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காகவும் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் பொதுமக்கள் வந்த செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் புகார் அளிப்பதற்காக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் கமிஷனர் அலுவலகம் அருகே வந்த போது கையில் வைத்திருந்த கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடி சென்று அந்த இளம்பெண் வைத்திருந்த கேனை பறித்ததுடன், அவரை காப்பாற்றினார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஐஸ்வர்யா (வயது 27) என்பது தெரிந்தது.
கருத்துவேறுபாடு
போலீசாரிடம் அந்த இளம்பெண் கூறியதாவது:- எனது சொந்த ஊர் தர்மபுரி. எனக்கு ஜெகதீஸ்வர் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே எனக்கும், கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதோடு, குடும்ப பிரச்சினையும் இருந்தது. இதன்காரணமாக நான் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறேன். தற்போது கோவை கீரணத்தத்தில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனது மகன் கணவருடன் வசித்து வருகிறார். எனது மகனை என்னுடன் அனுப்ப கணவர் மறுத்து வருகிறார். எனவே எனது மகனை என்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். அப்போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் இவ்வாறு அவர் கூறினார். எப்போதும் பரபரப்பாக இருக்கும் கமிஷனர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






