ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை


ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 1 Oct 2021 4:11 PM GMT (Updated: 1 Oct 2021 4:11 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாயின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாயின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஈரோட்டில் மழை
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. கண்டம் விட்டு கண்டம் பெய்யும் மழைபோல மாநகர் பகுதியிலேயே ஒரு இடத்தில் மழை இருந்தால், இன்னொரு இடத்தில் மழை பெய்யாது என்ற நிலையும் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலையில் திடீர் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் இந்த மழை கொட்டித்தீர்த்தது. முக்கிய ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடை வீதியில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் காட்டாறு போல ஓடியது.
ஓடைகள் நிரம்பின
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோட்டில் இடி-மின்னலுடன் மழை தொடங்கியது. ஒரே நாளில் 100 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. சமீப காலத்தில் பதிவான மிகப்பெரிய மழைப்பதிவு இதுவாகும். இந்த மழையால் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாறு போல ஓடிய வெள்ளத்தில் சாக்கடைகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை என அனைத்து ஓடைகளிலும் தண்ணீர் நிரம்பி சென்றது.
மதில்சுவர் விழுந்தது
ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தையில் மழை நீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். கொல்லம்பாளையம் லோகநாதபுரம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய கட்டிடத்தில் சுற்றுச்சுவர் இடித்து விழுந்தது. சுவரையொட்டி நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. 
இங்கு மழை நீர் வடிகால்கள் சரியாக இல்லாததால் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.
வீடுகளுக்குள் வெள்ளம்
கருங்கல்பாளையம் கற்பகம் லே-அவுட் பகுதியிலும் நேற்று மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இங்கு மட்டுமின்றி பெரியார் நகர் உள்பட மாநகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் ஓடிய மழை நீர் சாக்கடையுடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
இதுபற்றி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பகுதிகளில் ரோடு போடும் பணிகள் நடக்கிறது. பணிகள் கடமைக்காக செய்யப்படுகிறது. மழை நீர் வடிகால்கள் வசதி எதுவும் இல்லாமல் போடப்படும் ரோடுகளால் மழை நீர் பெருகி தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுபோல் பாதாள சாக்கடை திட்ட தோல்வியாலும் மழை பெய்தால் வீடுகளுக்குள் சாக்கடை தேங்கி விடுகிறது. இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை முறைப்படுத்தி ஸ்மார்ட் சிட்டி பணிகளை நிஜமாகவே “ஸ்மார்ட்” பணிகளாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கழிவுகள்
அவர் கூறிய குற்றச்சாட்டு உண்மை எனபதுபோல மாநகரின் பல பகுதிகளிலும் நேற்று பாதாள சாக்கடை திட்ட தொட்டிகளில் இருந்து மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து வெளியேறியது கண்கூடாக தெரிந்தது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.
வாகனங்கள் சாக்கடை தண்ணீரை கடந்து செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது கழிவுகள் தெறிக்கும் அவலம் நடந்தது. பாதாள சாக்கடை வெளியேறியதால் சாலைகளும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
காவிரி பாலம்
இதுபோல் கருங்கல்பாளையம் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதே நேரம் காவிரி ஆற்றை ஒட்டி உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பெய்த பெரு மழையால் அங்கு பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் ஓடிய வெள்ளம் காவிரி ஆற்று பழைய பாலத்தில் ஆறுபோல ஓடியது. இதனால் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு கார் பாலத்தில் தண்ணீரில் சிக்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் இருந்த 3 பேரை கயிறு கட்டி மீட்டனர். பாலத்தில் தண்ணீர் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வெண்டிபாளையம்
ஈரோடு வெண்டிபாளையம் புதிய நுழைவுபாலத்தில் மழை நீர் குளம்போல தேங்கியது. தரை மட்டத்தில் இருந்து அதிக பள்ளத்தில் நுழைவுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வெளியேற எந்த வசதியும் இல்லாததால் குளம்போல தேங்கிக்கிடக்கிறது. இதனால் நேற்று வாகனங்கள் நுழைவுபாலம் வழியாக செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ரெயில் தண்டவாளம் வழியாக வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர். 
வயலுக்குள் சாக்கடை
கருங்கல்பாளையம் அருகே சாக்கடை கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயலுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடியவிடிய மழை கொட்டித்தீர்த்தது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டர் அளவில் வருமாறு:-
கவுந்தப்பாடி-144.2
பவானி-103.6
ஈரோடு-100
கொடுமுடி- 98.2
பெருந்துறை-64
வரட்டுப்பள்ளம்- 61.2
மொடக்குறிச்சி-54
குண்டேரிபள்ளம்-51.6
கோபி-41.4
நம்பியூர்-36
கொடிவேரி-32.2
அம்மாபேட்டை-30
சத்தியமங்கலம்-27
தாளவாடி- 18
பவானிசாகர்-14.4
சென்னிமலை-11
மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது.

Related Tags :
Next Story