காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2021 4:22 PM GMT (Updated: 1 Oct 2021 4:22 PM GMT)

கீழ்வேளூர் அருகே முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே முகநூல் மூலம் பழகி காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூல் மூலம் காதல்
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செருநல்லூரை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகன் உதயகுமார்(வயது 28). இவர், திருவாரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சொக்களை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் தீபாவுக்கும்(24) (இவர் கல்லூரியில் எம்.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்) கடந்த 2018-ம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் இவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.
தாயாருக்கு குறுஞ்செய்தி
காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தீபா கடந்த 3 ஆண்டுகளாக செருநல்லூரில் உதயகுமாருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை.
திருமணத்திற்கு பிறகு தீபா தனது குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி தீபா தனது தாயார் அங்கம்மாள் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி(மெசேஜ்) அனுப்பி உள்ளார். அதில் எனக்கு இங்கே ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஏன் வாழ்கிறோம் என்று  இருக்கு என்று அனுப்பி உள்ளார்.
தற்கொலை
உதயகுமார், தீபா ஆகியோருக்கிடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபா நேற்று முன்தினம் காலை வீட்டில் எலிபேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்துள்ளார். 
 உடனே வீட்டில் இருந்தவர்கள் தீபாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். 
சாவில் சந்தேகம்
இதுகுறித்து தீபாவின் தாயார் அங்கம்மாள் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் தீபா இறந்து விட்டதால் அவரது இறப்பு குறித்து நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story