வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 1 Oct 2021 4:59 PM GMT (Updated: 1 Oct 2021 4:59 PM GMT)

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி திவான்சாபுதூர் ஊராட்சியில் 10 வாக்குச்சாவடிகளும், தென்குமாரபாளையத்தில் 8 வாக்குச்சாவடிகளும், ஜமீன்முத்தூரில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. போளிகவுண்டன்பாயைம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியின்றி பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பயிற்சி வகுப்பு

இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். 

ஓய்வு பெற்ற ஆணையாளர் முருகேசன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

ஓட்டு பெட்டிகள்

முகப்பு சீட்டு, முகவர் சீட்டுக்களை கவனமாக பார்க்க வேண்டும். வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேவையான ஓட்டு பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான விண்ணப்பங்கள் வந்து உள்ளதா? என்று உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஓட்டு பெட்டியை திறந்து காண்பித்து காலியாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். வாக்குபதிவின்போது எந்தவித பிரச்சினையும் வராமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story
  • chat