நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகள்; விவசாயிகள் அதிர்ச்சி


நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகள்; விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 Oct 2021 5:19 PM GMT (Updated: 1 Oct 2021 5:19 PM GMT)

நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நொய்யல் ஆற்றில் அதிக அளவில் கலந்து செல்லும் சாயக்கழிவுகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
ஒரத்துப்பாளையம் அணை
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்ததால் அணை நீர் முற்றிலும் மாசுபட்டது. மேலும் அணையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அணை நீர் சென்ற ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்கள் மட்டுமின்றி நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணைக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
சாயக்கழிவுகள்
அதன்பிறகும் ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரில் தொடர்ந்து திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக ஆங்காங்கே பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை ஒரத்துப்பாளையம் அணையில் தேக்கி வைப்பதில்லை என்பதால் அப்படியே நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளோடு தண்ணீரும் சேர்ந்து செல்வதால் ஆற்றங்கரை பகுதியில் உள்ள கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் சாயக் கழிவுகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. 
அதனால் மழை காலங்களில் திருப்பூர் பகுதியில் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story