வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் மாணவ,மாணவிகள், பெற்றோருடன் திடீர் போராட்டம்


வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் மாணவ,மாணவிகள், பெற்றோருடன் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2021 5:35 PM GMT (Updated: 1 Oct 2021 5:35 PM GMT)

வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை நடத்தக்கோரி மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை நடத்தக்கோரி மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை

வேலூர் ஓட்டேரியில் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இடஒதுக்கீடு முறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 
இந்த நிலையில் நேற்று 5-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில், தமிழ், ஆங்கிலம் தவிர்த்து பிற பாடங்களில் 271 முதல் 290.9 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க காலை 9 மணி முதல் கல்லூரியின் நுழைவுவாயில் முன்பு குவிந்தனர். 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. இதற்கிடையே இடஒதுக்கீடு முறையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டு முறையில் கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

மாணவர்கள், பெற்றோருடன் போராட்டம்

அதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரி நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கக்கோரியும், வன்னியர்களுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்தது குறித்து அறிவிப்பு வெளியிடாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், இடஒதுக்கீட்டில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்கும்படியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் காவேரி, முத்துரங்கம் கல்லூரி முதல்வர் மலர், வேலூர் தெற்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
அப்போது கல்வி இணை இயக்குனர் காவேரி, முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு முடிந்து விட்டது. மாதனூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியில் அதிக இடங்கள் காலியாக உள்ளது. அங்கு மாணவர்கள் சேரலாம் என்று தெரிவித்தார்.

அறிவிப்பு பலகை

அதையடுத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து கல்லூரியின் நுழைவு வாயின் முன்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றின் மாணவர்கள் சேர்க்கை, காலியிடங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 

மாணவர்களின் திடீர் போராட்டம் காரணமாக முத்துரங்கம் அரசு கல்லூரியின் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story