போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மனு
கருத்துகேட்பு கூட்டத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 25,26,27-ந்தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 14-ந்தேதி என 4 நாட்களில் 4 கிரானைட் குவாரி மற்றும் 4 கல்குவாரிகள் என 8 குவாரிகளுக்கான கருத்துக்கேட்பு கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. கருத்து கேட்பு கூட்டத்திற்காக 8 குவாரி உரிமையாளர்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தாக்கல் செய்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் போலியான ஆவணங்களை இணைத்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் இல்லாத, இயங்காத போலியான நிறுவனத்தின் பெயரை காட்டி காற்று, நீர், ஒலி, மண் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாக கூறி மோசடி ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளனர். காற்று, மண், நீர், ஒலி மாசு ஆகியவை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறப்படும் நாமக்கல் முகவரியில் உள்ள நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் இயங்கவில்லை. அந்த நிறுவனமே அந்த முகவரியில் இல்லை. கரூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த 8 கருத்து கேட்பு கூட்டங்களில், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் இல்லாத, இயங்காத நிறுவனத்தின் பெயரில் ஆய்வு செய்ததாக மோசடியான ஆவணங்களை வைத்து ஏமாற்ற முயன்ற 4 கிரானைட் குவாரி மற்றும் 4 கல்குவாரி உரிமையாளர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேடுகளை, மோசடிகளை கண்டுகொள்ளாமல் அனுமதித்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளம் எடுப்பதில் நடைபெறும் அனைத்து விதமான முறைகேடுகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுத்து சமூக சொத்தை பாதுகாக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story