மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை


மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:02 PM GMT (Updated: 1 Oct 2021 7:02 PM GMT)

மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்கள் மூழ்கி நாசமானது.

கரூர்
விடிய, விடிய மழை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை சுமார் 10 மணி வரை தொடர்ந்து பெய்தது. அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் காலையில் பணிக்கு சென்றவர்களும், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்களும் குடைப்பிடித்தும், மழையில் நனைந்தப்படியும் சென்றதை காணமுடிந்தது. 
இந்த தொடர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதியடைந்தனர். மேலும் கரூர் ஆசாத் ரோடு, சுங்ககேட் பஸ்நிறுத்தம், பசுபதிபாளையம் குகைவழிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
நச்சலூர்
நச்சலூர் பகுதிகளான நெய்தலூர், நெய்தலூர் காலனி, கட்டாணி மேடு, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெல் சாகுபடிக்கு நாற்று விடப்பட்டு நடவு செய்யப்பட்டது.
கனமழை காரணமாக இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக நெற்பயிர்களில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயம் செய்த விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர். 
தோகைமலை 
தோகைமலை வேதாசலம்புரம் மற்றும் பாதிரிபட்டி ஊராட்சி நாகநோட்டுக்காரன்பட்டியில் பெய்த கனமழையால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் பாடபுத்தகங்கள் நனைந்து நாசமானது. மேலும் தண்ணீருடன் சாக்கடையும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 
இந்த மழையால் தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தாராபுரத்தனூரில் தரைப் பாலம் வழியாக அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. இதனால் 2-வது முறையாக தாராபுரத்தனூரில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர். 
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 4-வதுவார்டு வளையம் பகுதியில் வடிகால் மற்றும் சாலை வசதி இல்லாததால் மழைநீர் தெருக்களிலும் வீடுகளிலும் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதேபோல கோவகுளம் தனியார் பள்ளி அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து இருப்பதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
குளித்தலை 
குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை சுமார் 7 மணி வரை தொடர்ந்து பெய்து  கொண்டே இருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலைகள், தெருக்கள, பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருந்தன. அதுபோல இந்த மழையின் காரணமாக குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இருப்பினும் சில மணி நேரங்களுக்கு பிறகு தண்ணீர் ஓரளவு வடிய தொடங்கியது. சில இடங்களில் வயல்களில் நிரம்பிய தண்ணீர் வடியாத நிலையில் இருந்தது. 

Related Tags :
Next Story