புதுச்சேரி தங்கும் விடுதி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


புதுச்சேரி தங்கும் விடுதி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:40 PM GMT (Updated: 1 Oct 2021 7:40 PM GMT)

புதுவை வந்த கள்ளக் காதல் ஜோடி தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது.

புதுச்சேரி, அக்.2-
புதுவை  வந்த  கள்ளக் காதல் ஜோடி தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது.
இளம்ஜோடி
புதுவை மணக்குள விநாயகர் கோவில் தெருவில் உள்ள தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம் பகல் 11 மணியளவில் வாலிபரும் இளம்பெண்ணும் வந்தனர்.
அங்கு தங்குவதற்காக அந்த வாலிபர் தனது பெயர் மோகன்ராஜ் என்றும் அதற்கான ஆதார் எண்ணையும் கொடுத்துள்ளார். இதையடுத்து தங்கும் விடுதியின் 3-வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டது.
அதன்பின் மாலையில் வெளியில் சென்று சுற்றிப்பார்த்து விட்டு இரவில் அறைக்கு திரும்பியுள்ளனர். நேற்று  காலை வெகுநேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பலமுறை தட்டியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி பெரியகடை போலீசுக்கு விடுதி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
தூக்கில் பிணம்
அதன்பேரில் போலீஸ் உதவி  சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு வந்து அறைக் கதவினை திறந்து பார்த்தனர். அப்போது அந்த இளஞ்ஜோடி அறையில் மின்விசிறிகளில் தனித்தனியே தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். 
இதைக்கண்டு போலீசாரும்,       ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்களை கீழே இறக்கிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
அந்த வாலிபரின் சட்டைப் பையில் இருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் ரசீது ஒன்றை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் வேலூர் மாவட்டம் கருகாம்புத்தூர் புதுத்தெருவை     சேர்ந்த புஷ்பராஜ் மகன் மோகன்ராஜ்   (வயது 22) என்பது தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு
அவருடன் தூக்கில் தொங்கிய பெண் கருகாம்புத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி நந்தினி (26) என்பதும் தெரியவந்தது. மோகன்ராஜூக்கும் நந்தினிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது கார்த்திக்கிற்கு தெரியவந்து மனைவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறியது. ரெயில் மூலம் சென்னை சென்ற அவர்கள் அங்கிருந்து புதுவைக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். 
கள்ளக்காதலுக்கு உறவினர்கள் இடையூறாக இருந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து இருவரும் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரியவந்தது.

Next Story
  • chat