பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அவர் காந்தி ஆடை புரட்சி நடத்திய கதர் நிலையத்தையும் பார்வையிடுகிறார்.
மதுரை
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அவர் காந்தி ஆடை புரட்சி நடத்திய கதர் நிலையத்தையும் பார்வையிடுகிறார்.
ஸ்டாலின் வருகை
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 420 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து 376 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடக்கிறது.
அதில் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, 10 மணி அளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து கார் மூலம் மு.க.ஸ்டாலின் பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்கிறார். செல்லும் வழியில் நாகமலைப்புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட வழிநெடுகிலும் தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள். காலை 10.30 மணிக்கு பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
திட்டப்பணிகளின் முன்னேற்றம்
இந்த கூட்டத்தில் ஊராட்சி நிதி செலவினம், கொரோனா தடுப்பூசியின் அவசியம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பான விவாதங்கள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், ஊட்டச்சத்து இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் பயன்படுத்துதல், கிராம சுகாதார திட்டம், மின்சார சிக்கனம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன..
காந்தி சிலைக்கு மரியாதை
இந்த கூட்டத்திற்கு பிறகு, மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மதுரை மேல மாசி கதர் விற்பனை நிலையத்திற்கு வருகிறார். அங்குதான் மகாத்மா காந்தி, ஆடை புரட்சி செய்து ஏழை மக்களுக்காக முதல் முறையாக அரை ஆடைக்கு மாறினார். அதன் நினைவாக அங்கு காந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். முதல்-அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
பாப்பாபட்டி கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கலெக்டர் அனிஷ் சேகர், போலீஸ் உயர் அதிகாரிகள் பாப்பாபட்டி கிராமத்தில் விழா ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






