புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி வழக்கு


புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 2 Oct 2021 1:26 AM IST (Updated: 2 Oct 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி வழக்கு

மதுரை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த லோகையாசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:- கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கோவில்களும் மூடப்படுகின்றன.
வருடந்தோறும் புரட்டாசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாளை தவறாமல் வழிபடுவார்கள்.
புரட்டாசி மாதம் ஏகாதசியுடன் இணைந்த சனிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த ஆண்டு புரட்டாசி, மார்கழி மாதங்களில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதனால் புரட்டாசியில் இனி வரும் சனிக்கிழமைகளில் கோவில்களை திறப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். பதில் இல்லை. எனவே புரட்டாசியில் மீதமுள்ள சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் கோவில்களில் நடக்கின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இந்து அறநிலையத்துறை கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
1 More update

Next Story