கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்


கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 2 Oct 2021 12:34 AM GMT (Updated: 2 Oct 2021 12:34 AM GMT)

கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

திருவள்ளூர், 

சென்னையை அடுத்த பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 22). இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி நண்பர் பிரபாவின் பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அழகுமுருகன் பிரபாவை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக டேனியல் மற்றும் அவரது நண்பரான மோகன் உள்பட 5 பேர் 28.10.2019 அன்று சரமாரியாக அழகுமுருகனை வெட்டிக்கொலை செய்தனர். இந்த முன்விரோதம் காரணமாக அழகு முருகனின் நண்பரான கண்ணதாசன் கடந்த 12.1.2021 அன்று பிரபா என்பவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இந்தநிலையில் டேனியல் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ்வரன், லோகேஷ், பால்ராஜ், ஜெகதீசன் ஆகியோர் கண்ணதாசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பட்டப்பகலில் கண்ணதாசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டேனியல் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் டேனியல் நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

டேனியல் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story