காந்தி சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மரியாதை


காந்தி சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2021 2:23 PM GMT (Updated: 2 Oct 2021 2:23 PM GMT)

தூத்துக்குடியில் பிறந்த நாளைமுன்னிட்டு காந்தி சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிறந்த நாளைமுன்னிட்டு காந்தி சிலைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், தாசில்தார் ஜஸ்டின், மாநகராட்சி ெபாறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னயா, மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கதர் விற்பனை

தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி சாலையில் உள்ள காதிகிராப்ட் அங்காடியில் நடந்த காந்தி பிறந்த நாள் விழாவுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பின்னர் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காந்தி பிறந்தநாளையொட்டி காதிகிராப்டில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம். 

இதன் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய 2 கதர் அங்காடிகளும், நெல்லை பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனமும் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டு அவர்களின் பொருளாதார நிலையும் உயர்வு பெற்றுள்ளது.

ரூ.82 லட்சம்

இந்த தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் போன்ற இடங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும். இந்த விற்பனை நேற்று முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்களாக செயல்படும்.

அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 மாத தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக கடந்த ஆண்டு ரூ.75.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.60.49 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் கிராம பொருட்கள் விற்பனை ரூ.54.60 லட்சம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த குறியீட்டை அடைந்திடவும் இத்தொழிலில் ஈடுபடும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறப்பு பெறவும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கதர் துணிகளை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 

இதில் நெல்லை கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் சுதாகர், மேலாண்மை இயக்குனர் (பனைவெல்லம்) பாலசுப்பிரமணியன், காதி கிராப்ட் மேலாளர் ஸ்ரீதர், பிரதீப், ஜெயந்தி, முத்தம்மாள், முத்துவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story