ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்தது


ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்தது
x
தினத்தந்தி 2 Oct 2021 5:27 PM GMT (Updated: 2 Oct 2021 5:27 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்தது.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதல்கட்டமாக 6-ந் தேதியன்று செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக 9-ந் தேதி காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6,097 பதவியிடங்களில் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 5,715 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேரும், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,369 பேரும், 666 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,702 பேரும், 4,728 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 15,734 பேரும் என 5,715 பதவியிடங்களுக்கு 19,982 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

தேர்தலையொட்டி அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளிலும் மாவட்ட தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களும், அதுபோல் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் மற்றும் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்து நின்றும் தேர்தலை சந்திக்கின்றனர்.
கடந்த 26-ந் தேதியன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அன்றைய தினத்தில் இருந்து இவர்கள் அனைவரும் சுறு, சுறு பிரசாரத்தை தொடங்கினர். தற்போது முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும் ஏறி, இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் பங்கிற்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் அனல்பறக்கும் வகையில் சூடுபிடித்துள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story
  • chat