தொடர் மழையால் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்


தொடர் மழையால் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 2 Oct 2021 7:19 PM GMT (Updated: 2 Oct 2021 7:19 PM GMT)

வாடிப்பட்டி பகுதியில் தொடர் மழையால் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரால் விளைந்த நெற்கதிர்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது

வாடிப்பட்டி
வாடிப்பட்டி பகுதியில் தொடர் மழையால் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரால் விளைந்த் நெற்கதிர்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயார்
வாடிப்பட்டி பகுதியில் பேரணை முதல் கள்ளந்திரி வரை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த கால்வாயில் கடந்த ஜூன் மாதம் 5-ந்் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது அதன்பின் விவசாய பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வந்தது. 
இதில் குறிப்பாக இப்பகுதி முழுவதும் நெல் பயிர் பயிரிடப்பட்டுள்ளது. நெல் விளைய 3 மற்றும் 4 மாதங்களாகும். தற்போது 3 மாதம் முடிந்த நிலையில் பல இடங்களில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது. 
சாய்ந்த நெற்கதிர்கள்
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் வயல்களில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் விளைந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகி வருகின்றன. அறுவடை எந்திரங்களையும் சேற்று வயலில் கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது. முற்றிய கதிர்கள் தினமும் மழையில் நனைந்து வருவதால், அதிக பாரம் காரணமாக சேற்றில் சாய்ந்து விடுகின்றன. வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் நெற்பயிரை காப்பாற்ற எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியும் தொடங்கி விட்டனர். 
இதனால் ஈர நெல்லுக்கு நல்ல விலை கிடைக்காத நிலையும் உள்ளது.மழை தொடரும் நிலையில் விளைந்த நிலத்தில் புல் முளைக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுபோல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து பேரிடர் நிவாரண நிதி மூலம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story