தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது


தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு  சீர்கெட்டு விட்டது
x
தினத்தந்தி 2 Oct 2021 7:58 PM GMT (Updated: 2 Oct 2021 7:58 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

திருப்பத்தூர்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். 

அறிமுக கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருப்பத்தூரில்  நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்,
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய 9 மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் 100 சதவீதம் வெற்றி பெறும். இங்கு தேர்தல் பொறுப்பாளராக கே.ஏ.செங்கோட்டையன், இருக்கிறார். 9 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

வாக்குறுதிகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். முடியாது என தெரிந்தும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்ப வைப்பதில் தி.மு.க.வினர் பெரிய கில்லாடி. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை தருவோம் என்றார்கள். ஆனால் கொடுத்தார்களா. இதை பற்றியெல்லாம் விரிவாக எடுத்து கூற வேண்டும்.

ஜெயலலிதா 6 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை வழங்கினார். ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் ஆகியவற்றின் மூலம் தற்போது கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மத கலவரங்கள் இல்லை. தற்போது தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை கொள்ளை அதிகரித்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது மின்தடை ஏற்படுகிறது. 

உள்ளாட்சி தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். தொண்டர்களை வெற்றி பெறச் செய்யும் கடமை பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். 
துரைமுருகன் எம்.ஜி.ஆரை பற்றி நா கூசாமல் அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 

துரைமுருகனை படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினாரே, அவர் துரோகியா? திரைபடங்கள் மூலம் தி.மு.க கொள்கைகளை பரப்பி தி.மு.க ஆட்சிக்கு வர காரணமானவர் எம்.ஜி.ஆர், இவர் நம்பிக்கை துரோகியா? மேடையில் எல்லாரும் சிரிக்க வேண்டும் என்பதற்காக நா கூசாமல் பேசக்கூடாது. 
இப்போது நாம் பெறும் வெற்றி அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்க்கு அடித்தளமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.
 இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் 
கே.ஏ.செங்கோட்டையன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் டாக்டர் லீலா சுப்ரமண்யம், ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி, மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.நாகேந்திரன், கந்திலி ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story