‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2021 8:01 PM GMT (Updated: 2 Oct 2021 8:01 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிறுவர் பூங்கா அமையுமா? 

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘ஏ’ காலனி வீமா சதுக்கம் முதலாவது தெருவில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. பின்னர் அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அங்கு புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே அங்கு புதர்களை அகற்றவும், பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- பேபி, வீமா சதுக்கம்.

பள்ளிக்கூடத்துக்கு காம்பவுண்டு சுவர் தேவை

பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி அருகே முத்தூர் பஞ்சாயத்து குத்துக்கல் கிராமத்தில் உள்ள பரும்பு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பள்ளிக்கூடத்துக்கு காம்பவுண்டு சுவர் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முருகன், ராஜகோபாலபுரம்.

எரியாத மின்விளக்கு 

திசையன்விளை காமராஜர் சிலை அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் அங்கு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- நாமத்துரை, தரகன்காடு.

திறந்து கிடக்கும் வாறுகால் 

பாளையங்கோட்டை 23-வது வார்டு வடக்கு உச்சினி அம்பாள் கோவில் எதிரில் உள்ள முத்துசாமி பிள்ளை சந்து பகுதியில் சாக்கடை வாறுகால் மீது அமைக்கப்பட்டிருந்த தளம் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், திறந்து கிடக்கும் வாறுகாலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அதை சரிசெய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். 
- ஜானகிராமன், பாளையங்கோட்டை.

தொடர் மின்வெட்டு

களக்காடு யூனியன் மலையடிபுதூரில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. சில நேரம் பகல் அல்லது இரவு முழுவதும் மின்வெட்டு தொடர்வதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மின்வெட்டை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- நம்பிராஜன், மலையடிபுதூர்.

பஸ்நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படுமா?

சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக ஓரிரு சிமெண்டு பெஞ்சுகளே உள்ளன. இதனால் அங்கு முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான பயணிகள் பஸ்சுக்காக தரையில் நீண்ட நேரம் அமர்ந்து காத்திருக்கின்றனர். எனவே அதிகாரிகள் அங்கு இரும்பாலான இருக்கைகளை கூடுதலாக அமைத்தால் பயணிகள் பயன் அடைவர். 
- ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.

மரங்களுக்கு இடையூறான இரும்பு கூண்டுகள் 

தென்காசி புதிய பஸ் நிலையத்தின் மேல்புறமும், மெயின் ரோட்டின் கீழ்புறமும் சாலையோரம் பன்னீர், மா உள்ளிட்ட ஏராளமான மரங்களை வளர்த்து வருகின்றனர். அவற்றை மரக்கன்றுகளாக நட்டு வளர்த்தபோது, அதை சுற்றிலும் இரும்பு கம்பி வலைக்கூண்டு அமைத்து இருந்தனர். அந்த கூண்டானது வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில், அவற்றின் தண்டு பகுதியை இரும்பு கூண்டுகள் நெருக்கியவாறும், அகற்ற முடியாதவாறும் உள்ளது. எனவே அந்த கூண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- இன்பராஜ், தென்காசி.

ஆபத்தான மின்கம்பம்

தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. அந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றுவதற்காக, அருகில் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனாலும் பழைய மின்கம்பத்தில் இருந்து உயர் அழுத்த மின்கம்பிகளை புதிய மின்கம்பத்துக்கு மாற்றாமலேயே உள்ளனர். எனவே பழைய மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்துக்கு மின் இணைப்புகளை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- சாய் கிரிஷ், தென்காசி.

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா? 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரி அருகில் உள்ள பயணிகள் நிழற்கூட கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. எனவே பழுதடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- உடையார், சாயர்புரம்.

Next Story