தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x
தினத்தந்தி 2 Oct 2021 8:21 PM GMT (Updated: 2021-10-03T01:51:07+05:30)

தஞ்சையில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர்:
தஞ்சையில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாநகரில் அவ்வப்போது லேசான தூறல் பெய்ததுடன் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழராஜவீதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அய்யங்கடை தெருவில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து நின்றது. இதனால் அந்த தெரு வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் பிற தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த மழை 1 மணிநேரம் பெய்தது. பின்னர் அவ்வப்போது லேசாக தூறியது. ஏற்கனவே மாவட்டத்தில் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லும் கொள்முதல் செய்யப்படாமல் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டு இருப்பதால் நெல்மணிகள் மழையில் நனைகிறது. நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடனடியாக நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Next Story