தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2021 8:28 PM GMT (Updated: 2 Oct 2021 8:28 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

மின்விளக்கு வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சிவக்கொல்லை 30-வது வார்டு ஸ்ரீகணபதி நகரில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையோரங்களில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கின்றன. அதுமட்டுமின்றி புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மின்விளக்கு வசதி செய்து தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளில் இருந்து விஷப்பூச்சிகள் சாலைக்கு வந்து விடுகின்றனர். இதன் காரணமாக இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஸ்ரீகணபதி நகரில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், ஸ்ரீகணபதிநகர், சிவக்கொல்லை.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வடக்குத்தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மின்கம்பம் பலத்த காற்று அடித்தால் விழுந்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பவித்ரன், வாழ்க்கை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கீழப்பாளையம் 2-வது வார்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.மேலும், மழைக்காலத்தில் சாலை முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி கீழப்பாளையம் 2-வது வார்டு பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பிரமேஸ்வரன், கீழப்பாளையம்.
சாலை சீரமைக்கப்படுமா?
கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியில் வஞ்சுளவல்லி சமேத சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கோவிலில் இருந்து கீழவீதிக்கு செல்லும் சாலையான சன்னதி தெரு பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-ஞானசேகரன், நாச்சியார் கோவில்.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள கருப்பமுதலியார்கோட்டை இணைப்பு சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக சைக்கிளில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் சாலையில் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
- சக்கரபாணி, கருப்பமுதலியார்கோட்டை.




Next Story