153-வது பிறந்த நாள்: காந்தி சிலைக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின் மரியாதை


153-வது பிறந்த நாள்: காந்தி சிலைக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2021 8:54 PM GMT (Updated: 2 Oct 2021 8:54 PM GMT)

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் ஆண்டுதோறும் காந்தியின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலை மற்றும் அதன் அருகில் அவரது உருவப்படம் ஆகியவை அரசு சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.50 மணிக்கு வருகை தந்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காலை 7.57 மணிக்கு வருகை தந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

பின்னர், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முன்பு சென்னை சர்வோதயா சங்கத்தின் சார்பில் காந்தியவாதிகள் கோவிந்தராஜன், சுப்புலெட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் காந்தியின் கைராட்டையை சுற்றியவாறு தேசபக்தி பாடல்கள் மற்றும் காந்தியின் கீர்த்தனைகள் பாடிக்கொண்டிருந்தனர். அதனை, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்புச்செயலாளர் மு.ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய சிவாஜி மன்ற முன்னாள் தலைவர் கே.வி.பி.பூமிநாதன் மற்றும் சேத்துப்பட்டில் உள்ள எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா விடுதி மாணவிகளும் காந்தியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, எம்.கே.அசோக், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் காந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவுநாளையொட்டி அவர்களது உருவப்படத்திற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போன்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், எம்.பி. சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள தனது வீட்டில், காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவுநாளையொட்டி அவர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.டி.ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story