கொரோனாவுக்கு கணவர் இறந்த நிலையில் 2 பிள்ளைகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனாவால் கணவர் உயிரிழந்த நிலையில், 2 பிள்ளைகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே நடந்து உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மனைவி வசந்தா (வயது 36). இந்த தம்பதிக்கு யஷ்வந்த் (15), நிஷிதா (6) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். பிரசன்னகுமார் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இதனால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளியில் பிரசன்னகுமார் வசித்து வந்தார். இந்த நிலையில் மாதநாயக்கனஹள்ளியில் சொந்தமாக வீடு ஒன்றை கட்ட பிரசன்னகுமார் முடிவு செய்தார். அதன்படி அவர் வங்கிகளில் இருந்தும், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்தும் கடன் பெற்று ஒரு புதிய வீட்டை கட்டி இருந்தார்.
அந்த வீட்டில் கடந்த ஆண்டு மனைவி, பிள்ளைகளுடன் பிரசன்னகுமார் குடியேறி இருந்தார். இந்த நிலையில் பிரசன்னகுமார் கடந்த ஆண்டு (2020) கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் வசந்தா மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வசந்தாவின் தம்பி நந்தீஷ், வசந்தாவின் செல்போன் எண்ணுக்கு நீண்ட நேரமாக தொடர்பு கொண்டார். ஆனால் வசந்தா செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தீஷ், வசந்தாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் வசந்தாவும், நிஷிதாவும் தூக்கில் தொங்கினர்.
இன்னொரு அறையில் யஷ்வந்த் தூக்கில் தொங்கினான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தீஷ் கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் வசந்தா, யஷ்வந்த், நிஷிதா ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வசந்தா, யஷ்வந்த், நிஷிதாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வசந்தா எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் இந்த உலகில் யாருக்கும், யாரும் நிரந்தரம் இல்லை. எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது எங்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. எனது கணவர் இறந்த பின்னர் கூட உறவினர்கள் எங்களுக்கு உதவி செய்யவில்லை. எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவும் விரும்பவில்லை.
எனது கணவர் வீடு கட்ட கடன் வாங்கி இருந்தார். நாங்கள் வசித்து வந்த வீட்டை விற்று அந்த கடனை அடைத்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாதநாயக்கனஹள்ளியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட வசந்தாவுக்கும், பிரசன்னகுமாருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. அவர்கள் 2 பேரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரசன்னகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதனால் வசந்தா மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எசருகட்டா ஏரியில் குதித்து தற்கொலை செய்ய வசந்தா முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அனுப்பி வைத்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் தற்போது வசந்தா தற்கொலை செய்து உள்ளார்.
கணவர் வசந்தகுமார் இறந்ததால் மனம் உடைந்து காணப்பட்ட வசந்தா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று இருந்தார். இதனால் வசந்தாவுடன் அவரது தாய் தாயம்மா வசித்து வந்தார். மேலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று வசந்தாவிடம், தாயம்மா தொடர்ந்து கூறி வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயம்மாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை நந்தீஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தார். இந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த வசந்தா, பிள்ளைகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story