கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; குமாரவலசு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு  பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்; குமாரவலசு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:56 PM GMT (Updated: 2 Oct 2021 8:56 PM GMT)

கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சென்னிமலை அருகே குமாரவலசு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

சென்னிமலை
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சென்னிமலை அருகே குமாரவலசு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். 
கிராம சபை கூட்டம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் குமாரவலசு ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு  குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ தலைமை தாங்கினார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ப.செங்கோட்டையன், ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
உறுதுணை
கிராம ஊராட்சிகள் சுயாட்சி பெற்ற அமைப்புகளாக விளங்கிட தூண்டுகோலாக இருந்தவரும் தேசத்தந்தையுமான மகாத்மா காந்தியடிகளின் கனவு மெய்ப்படும் வகையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊரக வாழ் மக்கள் குடிக்க உகந்த குடிநீரை வீட்டு குடிநீர் இணைப்பு மூலம் பெறுவதையும், சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு பொதுமக்கள் கிராம ஊராட்சிக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்.
நமது ஊர், நமது பொறுப்பு என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் செயல்பட வேண்டும். தற்போது கொரோனா தொற்று காலமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கழிப்பறை
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் எந்த ஒரு குடும்பமும் விடுபட்டு விடக்கூடாது. இதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை வசதியும், தகுதியான குடும்பங்களுக்கு கழிப்பறை வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
இவ்வாறு கலெக்டர் கூறினார். 
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனருமான லி.மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம்.ஜெ.சிங், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உமாசங்கர், ஈரோடு ஆர்.டி.ஓ. பெ.பிரேமலதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கெட்ஸி லீமா அமாலின், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணபதி சுந்தரம், ஜோதிபாக்கியம், பெருந்துறை தாசில்தார் சு.கார்த்திக் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் எம்.சதீஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story