மோடி பிரதமராக தொடர்ந்தால் நாடு சீரழிந்து விடும்; சித்தராமையா குற்றச்சாட்டு


மோடி பிரதமராக தொடர்ந்தால் நாடு சீரழிந்து விடும்; சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:58 PM GMT (Updated: 2 Oct 2021 8:58 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாகவும், மோடி பிரதமராக தொடர்ந்தால் நாடு சீரழிந்து விடும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாகவும், மோடி பிரதமராக தொடர்ந்்தால் நாடு சீரழிந்து விடும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூருவில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது;-

மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது

நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு மகாத்மா காந்தி பற்றி தாழ்வாக பேசி வருவது அதிகரித்து விட்டது. பிரதமர் மோடி உண்மை பேசுவதே இல்லை. உண்மையை பேசுவதற்கும் அவருக்கு தெரியவில்லை. பிரதமர் எதை பற்றி பேசினாலும், அதற்கு எதிரானதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளை பாதுகாப்போம் என்று கூறிவிட்டு, அவர்களது வாழ்க்கையை பா.ஜனதாவினர் நாசப்படுத்தி விட்டனர்.

பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான். தொழில்அதிபர்களான அம்பானி, அதானியின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடிக்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி, அதன் விலையை அதிகரித்து நாட்டு மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.

நாடு சீரழிந்து விடும்

பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பதற்கு பதிலாக தொழில்அதிபர்கள் அம்பானி, அதானியின் சொத்துகள் மீது 5 சதவீதம் வரி விதிக்கலாம். அப்படி அவர்களுக்கு வரி விதித்தால், மக்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க வேண்டிய நிலையே ஏற்படாது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று புகழுபவர்கள் பா.ஜனதாவை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பிரதமர் மோடிக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் தேசதுரோகிகளாக மாற்றப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்கள் பற்றி பிரதமருக்கு எந்த கவலையும் இல்லை. விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். விலைவாசி உயர்வை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி பிரதமராக தொடர்ந்து இருந்தால், இந்த நாடு சீரழிந்து விடும். நாட்டு மக்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story
  • chat