தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2021 9:48 PM GMT (Updated: 2 Oct 2021 9:48 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது
நாகர்ேகாவில் அருகே உள்ள இடலாக்குடி, வெள்ளாளர் தெருவில் சாலையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 1-10-2021 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
                          -நாகராஜன், இடலாக்குடி.

எரியாத தெருவிளக்கு
ஈத்தாமொழியில் இருந்து பெரியகாடு செல்லும் சாலையில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்ச உணர்வுடன் செல்கிறார்கள். எனவே தெருவிளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                        -ஸ்ரீனிவாசன், ஈத்தாமொழி. 

குளத்தை தூர் வார வேண்டும்
இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்பாலையில் இருந்து குடுக்கச்சிவிளைக்கு செல்லும் வழியில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பாசிகளாலும், குப்பைகளாலும், இறைச்சி கழிவுகளாலும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                            -டோண், இடைக்கோடு.

மின்கம்பிகளை உரசும் மரக்கிளை
பாலபள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியாவிளை மீன் சந்தையில்  இருந்து ஒரு தனியார் கல்லூரிக்கு செல்லும் சாலையில் இடதுபுறம் மின்கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்து உரசிய நிலையில்  உள்ளது. இதனால், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசும் அபாயம் ஏற்படுகிறது. இந்த மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                         -ஆனந்த், வெள்ளியாவிளை.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்
தக்கலை, சாரோட்டில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலையோரம் அழுகிய காய்கறிகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                           -சந்திரகுமார், சாரோடு.

மழைநீர் ஓடை தூர்வாரப்படுமா?
ஆரல்வாய்மொழி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட அழகியநகர் இந்திரா காலனி பகுதி வழியாக செல்லும் மழைநீர் ஓடை பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் ஓடையை தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                              -ஆல்பட், அழகியநகர்.

மின் கம்பத்தை அகற்ற வேண்டும்
நாகர்கோவில், புன்னை நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து ஏராளமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. காற்று மழை காலங்களில் மின்கம்பம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு அதை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                    -அருள் ஸ்டீபன், புன்னை நகர்.

பல்லாங்குழி சாலை
தடிக்காரன்கோணம் அருகே உள்ள கீரிப்பாறை பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, ெபாதுமக்கள் நலன் கருதி சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
                -மணிகண்டன், தடிக்காரன்கோணம்.


Next Story