செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Oct 2021 5:34 AM GMT (Updated: 3 Oct 2021 5:34 AM GMT)

செம்பரம்பாக்கம் அருகே சாலையை கடந்தபோது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மறுபக்க சாலையில் விழுந்த வாலிபரும், வாகனம் மோதி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதி பலி

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் சீனிவாஸ் (வயது 21). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சனி, ஞாயிறு 2 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள், அங்கு சாலையை கடந்து செல்ல முயன்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த தொழிலாளி ஏசுராஜன் (58) என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஏசுராஜன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

வாலிபரும் சாவு

ஏசுராஜன் மீது மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து மறுபக்க சாலையில் தூக்கி வீசப்பட்ட அர்ஜுன் சீனிவாஸ் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அர்ஜுன் சீனிவாசும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், 2 ேபரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிேசாதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story