கொரோனாவால் நிறுத்தப்பட்ட விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு


கொரோனாவால் நிறுத்தப்பட்ட விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
x
தினத்தந்தி 3 Oct 2021 10:17 PM IST (Updated: 3 Oct 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் நிறுத்தப்பட்ட விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடலூர் முதுநகர், 

விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளொன்றுக்கு, இரு மார்க்கத்திலும், 3 முறை இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரெயில் மற்றும் சாலை பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதையடுத்து நோய்த்தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

பயணிகள் ரெயில்

தொடர்ந்து கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போதும், மீண்டும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அதன்பிறகு தொடங்கியது. தற்போது கொரோனா விதிமுறைகளுடன் பல்வேறு இடங்களுக்கு விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாகவும் விரைவு ரெயில்கள் சென்று வருகின்றன. ஆனால் பயணிகள் பெரிதும் பயணிக்கும் பயணிகள் ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை.
குறிப்பாக விழுப்புரம்- மயிலாடுதுறை, கடலூர்- திருச்சி, கடலூர் - விருத்தாசலம்- சேலம், நாகூர் -பெங்களூர் ஆகிய பயணிகள் ரெயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் நாளொன்றுக்கு இரு மார்க்கத்திலும் 3 முறை இயக்கப்பட்டு வந்தன. 

மீண்டும் இயக்க வேண்டும்

இதில் கடலூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்வோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்அடைந்து வந்தனர். ஆனால் கடந்த 1½ ஆண்டு களுக்கு மேலாக விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் இயக்கப்படவில்லை. 

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் குறித்த நேரத்தில் அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்த நிலையில், தற்போது அது முடியவில்லை. இதேபோல் பெரும்பாலான மக்களுக்கும் இந்த ரெயில் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. ஆகவே நிறுத்தப்பட்ட விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். மற்ற பயணிகள் ரெயில்களையும் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
இது பற்றி ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story