பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மெகா முகாமில் 16,896 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி,
தமிழகம் முழுவதும் 4-வது வாரமாக நேற்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த மையங்களில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் நிர்வாக துறையின் இணை இயக்குனர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தடுப்பூசி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த 11 மையங்களில் 2200 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 18 மையங்களில் சுமார் 1700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் வனிதா, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
வடக்கு ஒன்றியத்தில் 42 மையங்களில் 3 ஆயிரம் பேருக்கும், தெற்கில் 30 மையங்களில் 2,500 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 25 மையங்களில் 2,756 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு தாலுகாவில் நேற்று 35 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி, கிணத்துகடவு தாசில்தார் சசிரேகா, தலைமையிடத்து துணை தாசில்தார் குமரி அனந்தன்,
கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, டாக்டர்கள் சமீதா, கவிதா, முகில்வண்ணன், பிரித்திகா, அருள்பிரகாஷ், பிரபு ஆகியோர் பார்வையிட்டு கண்காணித்தனர். சிறப்பு முகாமில் மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வால்பாறை தாலுகா பகுதியில் 40 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 740 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவர் டாக்டர் பாபுலட்சுமண் ஆகியோர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், நகராட்சி சுகாதார பணியாளர்கள் செய்திருந்தனர்.
வால்பாறையில் இதுவரை 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 16,896 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story






