தமிழக கர்நாடக எல்லையில் காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி பலி


தமிழக கர்நாடக எல்லையில் காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 5:01 PM GMT (Updated: 3 Oct 2021 5:22 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே தமிழக கர்நாடக எல்லையில் காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி பலியானார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்ரேதொட்டியை சேர்ந்தவர் சிவமாதேவா (வயது 44). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். 

அப்போது காட்டுப்பன்றிகள் கூட்டமாக அவரது நிலத்துக்கு வந்தன. இதை பார்த்த சிவமாதேவா விரட்ட முயன்றார். அப்போது காட்டுப்பன்றிகள் அவரை தாக்கின. இதில் சிவமாதேவா படுகாயம் அடைந்தார். 

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சிவமாதேவா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து கிராமமக்களிடம் விசாரணை நடத்தினர்.

காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அங்கு வந்து சிவமாதேவாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் கர்நாடக மாநில வனத்துறை மற்றும் போலீசாரிடம் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என அவர் கூறினார்.

Next Story