ஆனைமலையில் 500 டன் நெல் தேக்கம்


ஆனைமலையில் 500 டன் நெல் தேக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2021 5:13 PM GMT (Updated: 3 Oct 2021 5:13 PM GMT)

ஆனைமலையில் 500 டன் நெல் தேக்கம்

பொள்ளாச்சி

ஆனைமலையில் கொள்முதல் செய்யாததால் 500 டன் நெல் தேக்கம் அடைந்து உள்ளது. மழையில் நனைந்து வீணாகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நெல் கொள்முதல் மையம்

கோவை மாவட்டம் ஆனைமலை, கோட்டூர் பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் காரப்பட்டி, குளப்பத்துக்குளம் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஆனைமலை, கோட்டூரில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் புதிய நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் இணையவழியாக பதிவு செய்ய வேண்டும். அதில் பட்டா, சர்வே எண், பயிரிட்டுள்ள பரப்பு, மகசூல், அறுவடை தேதி ஆகிய விபரங்கள் பதிவேற்ற வேண்டும். அந்த பதிவு உரிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு செல்லும்.

விவசாயிகள் கவலை

அவர்கள் சம்பந்தப்பட்டவர் விவசாயிதானா, நிலம் அவருடையதா, அறுவடை உண்மை தானா என உறுதி செய்து பரிந்துரை செய்வார். அதன்பிறகு விவசாயிக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் ஒதுக்கப்பட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விற்பனை செய்யலாம்.

இதன் காரணமாக தற்போது விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாததால் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

500 டன் தேக்கம்

நெல் விவசாயத்தில் பெரும்பாலானோர் நிலங்களை குத்தகை, ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் பெயருக்கும் பட்டாவில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் வரும். அப்போது கொள்முதல் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்படும். 

அனைவரும் ஒரே சமயத்தில் அறுவடை செய்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் ஆவணங்களை சரிபார்த்து பரிந்துரை செய்து வாணிப கழக அதிகாரிகளிடம் டோக்கன் பெற காலதாமதம் ஏற்படும். 

நில உரிமையாளர்கள் நிலங்களை குத்தகைக்கு விட்டு உள்ளனர். நிலப்பட்டாவில் உள்ள பெயரும் குத்தகைதாரர்கள் பெயரும் வேறுபடும் போது அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இடைத்தரகர்களை தடுக்கும் புதிய அறிவிப்பு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அறுவடை செய்யப்பட்ட நெல்லை வீட்டிலோ அல்லது களத்தில் பாதுகாப்பாக வைத்திருந்து நேரம் ஒதுக்கப்பட்ட பின்னர் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 

இதனால் வாகனச் செலவு, அதற்கான கூலி என அனைத்தும் இரு மடங்காக அதிகரிக்கிறது. எனவே புதிய நடைமுறையை அரசு திரும்ப பெற்று பழைய முறையிலேயே நெல் ஈரப்பதம் மட்டும் பார்த்து ஆவணங்கள் இன்றி விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதை தொடர வேண்டும். தற்போது நெல் கொள்முதல் செய்யாததால் சுமார் 500 டன் நெல் தேக்கம் அடைந்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story