விபத்தில் 2 பெண்கள் பலி


விபத்தில் 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 6:09 PM GMT (Updated: 3 Oct 2021 6:09 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் மதுரை, சிவகங்கையை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள்.

 விபத்தில் 2 பெண்கள் பலி

மதுரை,

வெவ்வேறு வாகன விபத்துகளில் மதுரை, சிவகங்கையை சேர்ந்த 2 பெண்கள் பலியானார்கள்.

கட்டிட தொழிலாளி

  மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி கருப்பாயி (வயது 43). கட்டிட தொழிலாளியான இவர், கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். ஊமச்சிகுளம் -கடச்சநேந்தல் சாலையில் வந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் நிலை தடுமாறி பாண்டியும், கருப்பாயியும் சாலையில் தவறி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருப்பாயி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊமச்சிகுளம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவருடன் சென்றபோது விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

  இதுபோல் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கட்டமன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (46). இவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவனியாபுரம் சின்ன உடைப்பு பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த அங்கம்மா என்பவரும் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியதில், பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த அங்கம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  ----


Next Story