கள்ளழகருக்கு வர்ண குடைசாத்தும் நிகழ்வு

கள்ளழகருக்கு வர்ண குடைசாத்தும் நிகழ்வு பக்தர்கள் இன்றி நடந்தது.
அழகர்கோவில்,
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் சுந்தரராச பெருமாளுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வர்ண குடை சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நேற்று மதுரை கீழமாரட் வீதி நவநீதகிருஷ்ணன் பஜனை கூடத்தின் சார்பில் கள்ளழகருக்கு வர்ண குடை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த குடையானது 4 மாசி வீதிகளின் வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் சென்றது. அங்கிருந்து புறப்பாடாகி அழகர்கோவில் ஆண்டாள் சன்னதி முன்பாக இந்த வர்ண குடை கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மண்டப வளாகத்தில் ஏற்கனவே கருட வாகனத்தில் எழுந்தருளியிருந்த கள்ளழகர் பெருமாளுக்கு இந்த குடை பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் அரசு வழிகாட்டுதல் படி கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதின் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்ட பட்டர்களும், கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






