ஆடுகள் திருடிய 4 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்


ஆடுகள் திருடிய 4 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Oct 2021 8:23 PM GMT (Updated: 3 Oct 2021 8:23 PM GMT)

ஆடுகள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டு, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்:

வாகன சோதனை
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர்பந்தலில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 கார்களில் வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, காட்டு தலைவாசல் அம்பளக்காரர் தெருவை சேர்ந்த முகம்மது காசிம் (வயது 38), காரைக்குடி, காந்திபுரம் 12-ம் வீதி மேட்டு தெருவை சேர்ந்த பாக்கியம் (37), திருச்சி காந்தி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (37), திருச்சி ஜெ.கே.நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த அப்துல்கலாம் (51) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் முன்னுக்கு, பின் முரணராக பதிலளித்ததால் போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தினர். இதில் அவர்கள் 4 பேரும் கார்களில் ஆடு திருடும் கும்பல் என்பதும், அவர்கள் கடந்த மாதம் 5-ந்தேதி பெரம்பலூர் அருகே எளம்பலூர் புறவழிச்சாலையோரத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வரும் விவசாயி செல்வராஜின் 21 ஆடுகளை கார்களில் திருடி சென்றதும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி கவுல்பாளையம் 1-வது வார்டை சேர்ந்த பரமனின் 7 ஆடுகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம்மது காசிம், பாக்கியம், சரவணக்குமார், அப்துல்கலாம் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்த 2 கார்கள் மற்றும் ரூ.27 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 4 பேரும் ஏற்கனவே மாவட்டத்தில் குன்னம், மங்களமேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 3 திருட்டு வழக்குகளிலும், வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கிலும் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும், மேலும் அவர்கள் மீது புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story