பவானி அருகே மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்; 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்


பவானி அருகே மின்னல் தாக்கி குடோனில் பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம்; 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
x
தினத்தந்தி 3 Oct 2021 8:41 PM GMT (Updated: 3 Oct 2021 8:41 PM GMT)

பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது. 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பவானி
பவானி அருகே மின்னல் தாக்கியதில் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசம் ஆனது. 18 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 
மஞ்சள் வியாபாரி
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் அகர்வால். மஞ்சள் வியாபாரியான இவர் ஈரோட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் கவுந்தப்பாடியை அடுத்த பெரியபுலியூர் அருகே உள்ள வளையக்காரன்பாளையம் பகுதியில் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் மஞ்சள் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மற்றொரு பகுதியில் மஞ்சள் அரவை மில்லும் உள்ளது. 
இந்த குடோனில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வேலைக்கு வந்தனர். வேலை முடிந்ததும் அவர்கள் அனைவரும் 6 மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து குடோன் பூட்டப்பட்டது. 
மின்னல் தாக்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பெரியபுலியூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராஜேந்திரன் அகர்வாலின் மஞ்சள் குடோனை மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சள் குடோனின் சிமெண்டு மேற்கூரை உடைந்ததுடன், அங்கிருந்த மஞ்சள் மூட்டையிலும் தீப்பற்றியது. ஆனாலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. 
இதற்கிடையே மஞ்சள் மூட்டையில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் கரும்புகை வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் பரவியது. 
கொழுந்துவிட்டு எரிந்தது
கரும்புகை நெடி அடித்ததும் அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது மஞ்சள் குடோனில் தீ கொழுந்து விட்டு எரிந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் திகைத்துப்போன தீயணைப்பு வீரர்கள் ஈரோடு, கோபி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 
4 தீயணைப்பு வண்டிகள்-  6 லாரிகள்
அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் புளுகாண்டி தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் காந்தி (பவானி), முத்துக்குமாரசாமி (ஈரோடு), நவீந்திரன் (பெருந்துறை), ஆறுமுகம் (கோபி) மற்றும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து அதிகாரிகளின் ஆலோசனையின் படி 4 தீயணைப்பு வண்டிகளில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் மளமளவென பற்றி எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். மேலும் 6 தண்ணீர் லாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. 
பின்னர் தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்குள் வந்தபாடில்லை. இதையடுத்து 3 பொக்லைன் எந்திரங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. அவற்றின் உதவியுடன் குடோனின் சுவர் பகுதி, ஷட்டர் பகுதி, ஜன்னல் பகுதி ஆகியவை இடித்து தள்ளப்பட்டன. இதைத்ெதாடர்ந்து தீயணைப்பு வீரர்கள் குடோனின் உள்பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து மஞ்சள் மூட்டையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான...
தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் நேற்று பகல் 3 மணி அளவில் தீ கட்டுக்குள் வந்தது. ஆனாலும் மஞ்சள் மூட்டையில் கனன்று கொண்டிருந்த தீயானது திடீர் திடீரென பற்றி எரிந்தது. எனினும் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியே இருந்தனர். தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் மாலை 6 மணி அளவில் தீ முழுவதும் அணைந்தது. அதன்பின்னர்தான் தீயணைப்பு வீரர்களும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. 
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘இடி, மின்னலுடன் இந்த பகுதியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நள்ளிரவு பலத்த மழை பெய்து உள்ளது. அப்போது மின்னல் தாக்கியதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டையில் தீப்பிடித்து  விபத்து ஏற்பட்டு உள்ளது. எங்களின் முதல் கட்ட விசாரணையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசம் ஆகி உள்ளது,’ என்றனர். 
மஞ்சள் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story