பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி


பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2021 9:11 PM GMT (Updated: 3 Oct 2021 9:11 PM GMT)

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக அமைச்சர், கேரள மந்திரிகள் முன்னிலையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நாகர்கோவில்:
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக அமைச்சர், கேரள மந்திரிகள் முன்னிலையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி விழா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரிக்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது. 
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
நேற்று காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் எடுத்து கொடுக்க மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன், கேரள அறநிலையத்துறை மந்திரி ராதாகிருஷ்ணன், கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி ஆகியோர் பெற்றுக்கொண்டு குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினர். அவர் ஊழியர் சுதர்சன குமாரிடம் ஒப்படைத்தார்.  
பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. மேள தாளங்கள், வாத்திய குழுவினரின் வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்தூவினர். 
ஊர்வலத்தில் மன்னரின் உடைவாளை ஏந்தியபடி தேவசம் போர்டு ஊழியர் முன் சென்றார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டை போலும் இந்த ஆண்டும் யானை ஊர்வலம், கேரள போலீசாரின் பாதுகாப்பு, பேண்டு வாத்திய வரவேற்பு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை.  
பிடிபணம் வழங்கப்பட்டது
ஊர்வலத்தில் செல்லும் பக்தர்களுக்காக மன்னரின் சார்பில் பிடிபணம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தேவசம் அறங்காவலர்குழு தலைவர் சிவகுற்றாலம், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட், நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ. அன்சலன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஜோதீந்திரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், துணை தலைவர் குமரி ப.ரமேஷ், தேவசம் போர்டு தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் ரமேஷ், மராமத்து பொறியாளர் அய்யப்பன், இந்து முன்னணி நிர்வாகிகள் அரசுராஜா, மிசா சோமன், கண்ணன், பத்மநாபபரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
ஊர்வலம் கொல்லக்குடி முக்கு, மேட்டுக்கடை வழியாக கேரளபுரம் மகாதேவர் மற்றும் அதிசய விநாயகர் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சரஸ்வதி அம்மன் அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கும், முன்னுதித்த நங்கை மற்றும் முருகன் சிலைகள் கேரளபுரம் மகாதேவர் கோவிலுக்கும் ெகாண்டு செல்லப்பட்டன. அங்கு சிலைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
குழித்துறை சென்றடைந்தது 
பின்பு ஊர்வலம் திருவிதாங்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, காட்டாத்துறை, சாமியார்மடம், இரவிபுதூர்கடை, பம்மம், மார்த்தாண்டம் வழியாக மதியம் குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. நேற்று இரவு கோவிலில் சிலைகள் தங்கவைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் தமிழக போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். 
இன்று (திங்கட்கிழமை) காலை சாமிசிலைகள் ஊர்வலம் குழித்துறையில் இருந்து மீண்டும் புறப்பட்டு கேரள எல்லையான களியக்காவிளையை சென்றடைகிறது. அங்கு கேரள அரசு சார்பில் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் இரவு சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் தங்க வைக்கப்படும்.
பத்மநாபசாமி கோவில் 
அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.
 அதன்பிறகு தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் கோட்டைக்ககம் உள்ளே உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருள்வார். வேளிமலை முருகன் ஆரிய சாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டஅம்மன் கோவிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடக்கிறது.

Next Story