கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: நளின்குமார் கட்டீலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: நளின்குமார் கட்டீலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம்
x
தினத்தந்தி 3 Oct 2021 9:27 PM GMT (Updated: 3 Oct 2021 9:27 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு வழங்குவது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு வழங்குவது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைவருக்கு அதிகாரம்

கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் சட்டசபை இடைத்தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெயர்களை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு தலா 2 பேரின் பெயர்கள் என மொத்தம் 4 பேரின் பெயர்களை கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பெயர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரகசிய ஒப்பந்தம்

சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதியிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு. ஜனதா தளம் (எஸ்) கட்சி முஸ்லிம் ஒருவருக்கு டிக்கெட் வழங்கியுள்ளது பற்றி நான் என்ன கூற முடியும். இது அந்தந்த கட்சிகளின் விருப்பம். இதை வைத்து அக்கட்சி பா.ஜனதாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) ஆகிய 2 கட்சிகளும் ரகசிய ஒப்பந்தம் வைத்து கொண்டாலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த 2 கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. எத்தனை தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். துமகூருவில் தேவேகவுடா தோல்வி அடைந்தார். நாங்கள் எங்கள் அரசுகளின் சாதனைகள், கட்சியின் தத்துவங்கள் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம்.

ஆலோசனை கூட்டம்

சித்தராமையாவுக்கு இன்னொரு வீட்டின் சமையல் அறையை எட்டி பார்க்கும் பழக்கம் உள்ளது. இது சரியல்ல. வருகிற மேல்-சபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக தீபாவளிக்கு பிறகு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராண், சதானந்தகவுடா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், கட்சியின் மாநில துணைத்தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story