பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் காங்கிரசில் சேர விருப்பம்; சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2021 9:27 PM GMT (Updated: 3 Oct 2021 9:27 PM GMT)

கர்நாடகத்தில் பா.ஜனதாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெலகாவி: கர்நாடகத்தில் பா.ஜனதாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

40 எம்.எல்.ஏ.க்கள்

பா.ஜனதாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை எங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தொடர்பாக கட்சி மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. எங்கள் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவை சேர்ந்த சஞ்சய் பட்டீல் தரக்குறைவாக பேசியுள்ளார்.

இவ்வாறு பேசுவது அவருக்கு ஒன்றும் புதியது அல்ல. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் அதுபோல் பேசியுள்ளார். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் நாகரிகமான முறையில் பேச வேண்டும். பெலகாவி மாவட்ட மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

இழுக்க முயற்சி

ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பகிரங்கமாக கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான சதீஸ் ஜார்கிகோளி, பா.ஜனதாவை சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு வர இருப்பதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story