சேலத்தில் பக்கத்து வீட்டில் குழந்தை விளையாடியதில் தகராறு; பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு


சேலத்தில் பக்கத்து வீட்டில் குழந்தை விளையாடியதில் தகராறு; பெண் மயங்கி விழுந்து திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2021 9:49 PM GMT (Updated: 3 Oct 2021 9:49 PM GMT)

சேலத்தில் பக்கத்து வீட்டில் விைளயாடிய ஆண் குழந்தையை கூப்பிட சென்ற தந்தை, அங்கிருந்த பெண்ணுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் மயங்கி விழுந்த அந்த பெண் திடீரென இறந்தார்.

சேலம்:
சேலத்தில் பக்கத்து வீட்டில் விைளயாடிய ஆண் குழந்தையை கூப்பிட சென்ற தந்தை, அங்கிருந்த பெண்ணுடன் வாய் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் மயங்கி விழுந்த அந்த பெண் திடீரென இறந்தார். 
ஆண் குழந்தை
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி சாந்தி (வயது 56). கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியசாமி (31). இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அடிக்கடி சாந்தி வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம்.
இதேபோல் அந்த குழந்தை நேற்று இரவு சாந்தி வீட்டுக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது சுப்பிரமணியசாமி அங்கு சென்றார். எதற்காக இவர்கள் வீட்டிற்கு வந்து விளையாடுகிறாய் என்று கூறியபடி குழந்தை என்றும் பாராமல் அவர் அடித்ததாக கூறப்படுகிறது.
மயக்கம் அடைந்த பெண்
அப்போது சாந்தி, குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள்? எங்கள் வீட்டில் வந்து விளையாடினால் என்ன என்று கேட்டு உள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. 
அப்போது சாந்தி திடீரென்று மயக்கம் அடைந்து வீட்டிலேயே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறிக்கொண்டு அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த போது சாந்தி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
தகவல்கிடைத்ததும், சூரமங்கலம் போலீசார் சாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாந்தி எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
பக்கத்து வீட்டில் குழந்தை விளையாடியதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் மயக்கம் அடைந்த பெண் திடீரென்று இறந்த சம்பவம் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
===

Next Story